சிவ வாக்கியர் பாடல்

சிவ வாக்கியர் பாடல்

”மாறுபட்டு மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊருபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே,
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.”

” தேன் அபிஷேகம் சிவலிங்கத்துக்கு பண்றதை சொல்றார். முட்டாள்களே, வழி தவறி எங்கெங்கோ போய் காட்டுக்குள் தேடி, வண்டுகளின் எச்சில் மூலம் சேகரிக்கப் பட்ட தேனை, வெயிலிலும் மழையிலும் உலர்ந்து நனைந்த சிவலிங்கம் என்ற பழைய கல்லின் மேல் கொட்டி வணங்குகிறீர்களே, புரிந்து கொள்ளுங்கள், தேவர்களுள் உள்ள பிணக்கை தீர்த்தவனும் அடிமுடி காணாத ஜோதியுமான என்னை அறிய முயலுங்கள். நான் கல்லில் மட்டும் இல்லையே.. என்கிறார் சிவன்” .

”சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே
கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே

இந்த அஞ்செழுத்து மந்திரம் இருக்கிறதே. ஓம் நமசிவாய: இதன் சக்தி அளவிடமுடியாதது. முதலும் முடிவும் இல்லாதது மட்டுமல்ல அதுவே எல்லாமுமானது. முப்பத்து முக்கோடி தேவரும் வணங்கும் சிவனை இந்த நாம மந்திரத்தோடு உச்சரித்தால், தோஷம், பாவம், மாயை, துன்பம் சகலமும் விலகும். ஓடிவிடும். கரிய முகத்தோடு கூடிய சிவன் ஞான சிகரம். மோன விளிம்பு. ஏதோ அறியேன் பேதையாக பிதற்றுபவன் சிவ வாக்கியம் என்று தவறாக எதையாவது சொல்லியிருந்தால் க்ஷமிக்க வேண்டும். அவனுக்கே பித்தன், பேயன் சுடலையான் என்று தானே பெயர்…

”என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

உள்ளே ஆழமாக போகவே வேண்டாம். மேலெழுந்தவாரியாக பார்த்தாலே அர்த்தம் புரியும்.
என்னுள்ளே உள்ள அவனை — உள்ளே கிடக்கும் ”கட- வுள்’ என்னிலேயே இருப்பதை மூடன் நான் அறியவில்லை, என்னுள்ளே அவன் இருக்கிறான் என்று எப்போது தெரிந்ததோ, எப்போது என்னால் அவனை உணர முடியுமோ, அதை உணர்ந்து கொண்டேனோ, அவனைப் புரிந்து கொண்டேனோ, ஆஹா, நான் அவனோடு உள்ளே கலந்து ஐக்யமாகி விட்டேன் சார். என்ன சந்தோஷம் ! மனசு பூரா அவன் கிட்டேயே. மனசு அவனை விட்டு வெளியே வரமாட்டேங்குது, சார் ”.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொண மென்று சொல்லு மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?

அர்த்தம் தேவையில்லை. கல்லிலானான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, நிறைய புஷ்பம் சார்த்தி, மொண மொண வென்று ஏதேதோ மந்திரம் எல்லாம் சொல்லுகிறாயே. அது பேசுமா? அதே நேரத்தில் கொஞ்சம் யோசி. உன்னுள்ளே சதா சர்வ காலமும் இருந்து கொண்டு அந்தராத்மா என்று பெயர் சொல்லுகிறாயே, அது இருப்பதை கவனத்தில் வைத்தாயா.? அது பேசுமய்யா , கொள்ளை பேச்சு பேசும்!! . இருப்பதை விட்டு இல்லாததை தேடுகிறாய்.

கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
 
கோயில் கோயிலாக  போகிறாயே. இதுவரை  எத்தனை  குளங்களில்  ஸ்நானம் செய்து புண்ணியம்  தேடியிருக்கிறாய்.  எங்கெங்கோ சென்று திரிந்து  அலைந்து  சலித்து களைத்து கோவிலையும் குளத்தையும்  நாடினாயே .  அந்த  கோவில்கள்  குளங்கள்  எல்லாம்  உனக்குள்ளேயே  இருப்பதை  என்றாவது  ஒரு  நிமிஷம்  உணர்ந்ததுண்டா. பிறந்தான்  இறந்தான்  என்று  ஒவ்வொருவனைப்பற்றியும்  பேசுகிறோமே,  அதோ பார்  நேற்று  இருந்தது  இன்று  இல்லை  என்று  மாற்றங்களைப்பற்றி  மணிக்கணக்கில்  பேசுகிறோமே.  அந்த  மாற்றங்கள்,  பிறப்பு  இறப்பு  இவை யாவுமே  மாயை.  இருப்பது  போல்  தோன்றும்  அது  உண்மையிலேயே  இல்லாதது. 
 
செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
 
உன் கண்ணெதிரே  நிற்கிறதே  உயரமான  தென்னை மரம். குலை குலையாக  பச்சையும்  பழுப்புமாக  எத்தனை எத்தனை பெரிய  இளநீர்கள் தொங்குகின்றன  என்பதை தலை ஒடித்து அண்ணாந்து பார்க்கிறாயே.  ஒரு  விஷயம்  யோசித்தாயா?  யாரப்பா  அவ்வளவு உயரத்தில் ஒவ்வொரு  தேங்காய் உள்ளேயும்   இனிமையான சுவையான  இளநீரை நிரப்பியது.   காரணம்  ஏதாவது  சொல்ல முடிகிறதா.  இது தான்  இங்கேயும். என் மனத்தில்  நான்  அறியாமலேயே  பிறந்தது முதல்  என் இறைவன்  என்னைக்கேட்காமலேயே என்னுள், என் மனத்தைக் கோயிலாகக்  கொண்டு  குடியிருக்கிறான்.  நான்  ஏன்  இன்னும்  புரிந்துகொள்ளவில்லை?  புரிந்து கொண்ட அடுத்த  கணமே மௌனமாகிவிடுவேன்.  ஏன் என்றால்  என்னால்  அதைச் சொல்ல முடியாது.  சொல்ல வார்த்தை கிடையாது.  அனுபவிக்கவே  நேரம்  போதாதே.
 
Advertisements

திருமூலர் திருமந்திரம்

 

திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்லியிருப்பதைப் பாருங்கள்

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே

.தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

நமது வாழ்க்கை இலையின் மேல் வாழும் பனித்துளி போன்றது. இரவு ஜனித்தது. விடியலில் சூரியன் ஒளியில் மறைந்தது. இவ்வளவு நிச்சயமில்லாத சுருக்கமான வாழ்க்கையில் எத்தனை திட்டங்கள், நம்பிக்கைகள், கோபம், தாபம், எரிச்சல், பொறாமை, சுயநலம்.விரோதம். இதெல்லாம் விட்டொழிக்க வேண்டியவை. நிரந்தரம் இல்லாததை விட்டு நித்யமானதைத் தேடவேண்டும். நமது வாழ்க்கை எப்படியாம் தெரியுமா?

நேற்று பார்த்தேனே, நன்றாக பேசினானே, அடுத்தவாரம் வீடு வாங்குவதாக சொன்னானே. தண்டு போய்விட்டானா? ”—- என்று சொல்லும் நிலையற்ற வாழ்க்கை. இறந்து போனவனைச் சுற்றி ஏகக் கூட்டம். ஊரே திரண்டு விட்டது. ‘ஓ’ வென்று பேரிரைச்சல். அழுகை, எவ்வளவுநேரம். ஒரு நாள் கூட தாங்காது. அவன் பெற்ற பெயர், பட்டம், எல்லாம் அவன் மரணத்தோடு மறைந்து விட்டதே. அவன் அடைந்த பெயர் இப்போது பிணம். இந்த பெயர் கூட அவனை இடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் வரை தான்.

அவன் இப்போது இல்லை. அவனைத் தீக்கிரையாக்கியாச்சு. வேலை முடிந்தது. எல்லோரும் திரும்பிவிட்டார்கள். வீடு திரும்பினார்கள். குளித்தார்கள், மேற்கொண்டு தங்கள் வழக்கமான வேலையைத் தொடர் ந்தார்கள். இருந்தவன் இறந்த பின் நினைவானான். நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. அவனும் அவன் நினைவும் கூட இப்போது இல்லை.

இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கவனித்து எழுதியிருக்கிறார். ஒரு விஷயம் தெரியுமா? திருமூலர் மூவாயிரம் ஆண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு பாட்டு (திருமந்திரம் எழுதினர்) திருமந்திரம் மொத்தம் 3000.!! அதில் இது ஒன்று.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
இறைவனுக்கு வேண்டியது என்ன? ஒரே ஒரு பச்சிலையே போதும். ஒரு துளி நீர் போதும்.இது கஷ்டமில்லையே?
எல்லோராலும் செய்ய முடிந்தது பசுவுக்கு ஒரு வாய் கீரைக்கட்டு .
அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தர்மம் சாப்பிடும் முன் ஒரு பிடி சாதம் காக்கைக்கு.
இதற்கு மேலும் சிறந்தது மற்றவர்க்கு ஒரு நல்ல இனிய வார்த்தை. திருமூலர் தனக்கே உரிய வழியில் அழகாக எளிமையாக இதை நான்கு அடியில் விளக்குகிறார்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரை தானே.
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்றுகோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.

கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுரந்தாகனின் மூன்று வலிமையான கோட்டைகளைஎரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்..அவர் இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும்.
என்று வியக்கிறார் திருமூலர்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே
கடைசியாக ஒன்று.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே

இது என்ன சொல்கிறது பார்ப்போமா? சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறேன். அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான்.