பரிகாரத் தலங்கள்

பரிகாரத் தலங்கள்
ஆயுள் பலம் வேண்டுதல்..

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

*ஆரோக்கியத்துடன் வாழ..*

1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண் டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

*எதிரி பயம் நீங்க..*

1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

*கடன் பிரச்சனைகள் தீர..*

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

*கல்வி வளம் பெருக…*

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

*குழந்தைப்பேறு அடைய…*

1.அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க…*

1.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அருள்மிகு மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

*செல்வ வளம் சேர…*

1.அருள்மிகு அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

*திருமணத்தடைகள் நீங்க…*

1.அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அருள்மிகு கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

*தீவினைகள் அகன்றிட..*

1.அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர…*

1.அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

*நோய், நொடிகள் தீர…*

1.அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண…*

1.அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

முன்னோர் வழிபாட்டிற்கு..

1.அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அருள்மிகு வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அருள்மிகு திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அருள்மிகு சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

ஒரே எழுத்தில் பாடல்

ஒரே எழுத்தில் பாடல்

திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

பொருள்
திதத்தத் தத்தித்த = “திதத்த தத்தித்த” என்னும் தாளம் போட்டு
திதி தாதை = நடனம் செய்யும் தந்தை சிவபெருமானும்
தாத = மறைக் கிழவனாகிய பிரம்ம தேவனும்
துத்தி = புள்ளி வைத்திருக்கும் (படம் எடுக்கும்)
தத்தி = பாம்பு (ஆதி சேடன்)
தா தி = அந்த இடத்தில், நிலையாக இருந்து
தத்து = தளும்புகின்ற
அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)
ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்)
தித்தித்ததே = தித்திப்பா இருக்கு-ன்னு
து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!)
துதித்து = இவர்கள் எல்லாம் போற்றும்
இதத்து ஆதி = இதம் தருவதில் ஆதியே! அன்பர் இதத்தாதீ!
தத்தத்து = தந்தம் உடைய
அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை = கிளி போல் கொஞ்சும் தெய்வயானைக்கு
தாத = தாசனே! தேவானை தாசனே முருகா!
தீதே துதை தாது = தீமை நிறைந்த இரத்தமும் மாமிசமும்
அதத்து உதி = மரணமும் பிறப்பும்
தத்து அத்து = ஆபத்தும் நிறைந்த
அத்தி தித்தி = எலும்பு மூடிய பை (உடல்)
தீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்
திதி = அந்நாளிலே
துதி தீ = உன்னைத் துதிக்கும் அடியேனின் புத்தி
தொத்தது = உனக்கே தொத்துப்பட (ஆட்பட) வேணும்!

திருமலையானுக்கு ராமானுஜர் அனுப்பிய ஓலை

திருமலையானுக்கு ராமானுஜர் அனுப்பிய ஓலை!

ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, மோரு வாங்கலீயா மோரு என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. ஓர் குலப் பெண்மணி தலையில் மோர்ப்பானையைச் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆனால் குருநாதரிடம் சொல்லவும் தயக்கம். எனவே ஆசையை அடக்கிக்கொண்டு பாடத்தில் கருத்தாக இருந்தனர். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம் படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா… சாமி…. நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப்பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள்.

அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அப்போது ராமானுஜர் அவளிடம், நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன? என்று கேட்டார். முதலில் காசு ஆசை இருந்த அவள் மனது இப்போது வேறுவிதமாக மாறி இருந்தது. ராமானுஜரை பக்தியுடன் பார்த்து, காசெல்லாம் வேணாம் சாமி. அதை வைச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன் என்றாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா பொருள் ஏதாவது வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், எனக்கு காசும் வேணாம், பொருளும் வேணாம்… பெருமாளை அடையணும், மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க, சந்தோஷமா போயிடுவேன் என்றாள்.

ராமானுஜர் வியப்புடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்ற ஆசை எப்படித் தோன்றியது? இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கவலைப்படாதேம்மா…. உன் நல்ல குணத்திற்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும், போய் வா என்றார். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. உங்க வாக்கு பலிக்கட்டும் சாமி. அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு வழியைக் காட்டுங்க. போய்ச் சேர்றேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். பிறகு அவளிடம் நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ, இங்கு கூடியிருக்கும் சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கிறானே ஒருவன்….. ஏழுமலைக்குச் சொந்தக்காரன்…. அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி நகருவதாக இல்லை. அவள், சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும். மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறாரே என்றாள் கவலையுடன்.

அப்படி இல்லம்மா, அவளுக்கு என்ன வேலை இருக்கோ… அதை குறையா வெச்சுக்காதே… நீ விடாமல் கேட்டுக் கொண்டே இரு…. நிச்சயம் ஒரு நாள் மோட்சம் கொடுப்பார் என்றார் ராமானுஜர். இல்லீங்க சாமி, ஒங்களைத்தான் நம்பறேன் என்றாள். இவள் ஏதோ தீர்மானத்துடன் இருக்கிறான் போலிருக்கிறதே என்று யோசித்தார் ராமானுஜர். பிறகு அந்தப் பெண்மணி சாமி எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி கேட்பாரு என்றாள் தெளிவாக. இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். சீடர்களுக்கு வியப்பு தாங்கவில்லை. குருநாதர் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்தனர். ராமானுஜர் மேலே அண்ணாந்து பார்த்து ஏழுமலையானை மனதால் இருகரம் கூப்பி வணங்கி முகவரி எழுதும் இடத்தில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார்.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடியே, அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தாள். அர்ச்சகர்கள் குழப்பத்துடன் இது என்ன ஓலை? என்று கேட்டனர். மோர்க்காரப் பெண்மணி முழு விவரத்தையும் கூறினாள். அர்ச்சகர்கள் ராமானுஜர் கொடுத்த ஓலை என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் பெருமாளின் காலடியில் சமர்ப்பித்தனர். ராமானுஜரின் சிபாரிசை ஏற்றுக் கொண்ட பெருமாள் வானில் இருந்து புஷ்பக விமானத்தை விஷ்ணு தூதர்களுடன் அனுப்பி மோர்க்காரியை வைகுண்டத்திற்கு அழைத்து வரச் செய்தார். உடையவர் உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சமத்தை உணர்த்துகிற சம்பவம் இது. தெய்வபக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது.

பெரியவர் பாகவதம்

திருவரங்கம் கோயிலில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவம்:

அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழுவில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் பல நேரங்களில் கருடன் சந்நிதியுடன் நின்று விடுவார்.

அரங்கன் திசை நோக்கி வணங்கிவிட்டு கருட மண்டபத்தில் சற்று இளைப்பாறி, மற்றவர்கள் திரும்பி வரும்போது தானும் திரும்பி விடுவார். பலவித விமர்சனங்கள், கேட்டும் கேளாதது போல், தினம் தினம் வருவதும் ஒரு சில நாட்கள் அரங்கன் கோயில் உள்ளே சென்று தரிசித்து வருவதுமாக இருந்த அவர், ஒரு நாள் கையில் பாகவதம் புத்தகத்துடன் வந்து, கருட மண்டபத்தின் கீழ் பகுதியில் ஓரமாய் அமர்ந்து, சிறிது நேரம் படித்து விட்டு, வீடு திரும்புவது என வழக்கத்தை ஏற்படுத்துக் கொண்டார். ஆக அரங்கனை சென்று சேவிப்பது என்பது அபூர்வமாகி விட்டது.

பலரும் அவர் புத்தகம் படிப்பதை பார்த்துவிட்டு செல்வார்கள். பண்டிதர்கள் சிலர் நின்று சற்று நேரம் கேட்டு விட்டு செல்வார்கள். அதில் ஒரு சிலர் இவர் சில வரிகளை விட்டு விட்டு சில வரிகளை படித்து பக்கங்களை புரட்டுவதை பார்த்து, வயது மூப்பு காரணமாய் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க இயலாது ஆர்வம் ஒன்றே முதலாய் கொண்டு ஏதோ வயதான காலத்தில் படிக்கிறார் – பாவம்! தவறை தெரிந்தா செய்கிறார்? போகட்டும் என நினைத்து அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.

அங்கும் இங்கும், அவரவர் பேச, பண்டிதர் படிக்கிறாரே தவிர ஒரு ஒழுங்கும் இல்லை. பக்கத்தில் பாதி படிப்பது, மீதி விழுங்குவது என எதோ படிக்கிறார். அவ்வளவுதான்! மூப்பு காரணமாய் புத்தி சரியாக வேலை செய்யவில்லை, என பேசி கடைசியில் ‘அதுவா! அது ஒரு அரைப்பைத்தியம்’ என பட்டம் கட்டி விட்டார்கள்.

எது எப்படியோ! பண்டிதர், தான் தினமும் பாகவதம் படிப்பதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் அரங்கனை சேவிக்க, வெளியூரிலிருந்து, ஆச்சாரியார் நிலையில் உள்ள பெரிய பண்டிதர் ஒருவர் வரப்போவதாய் சேதி வந்தது. உள்ளூர் பண்டிதர்கள் கூடி அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்தனர்.

மேளதாளத்துடன், வேத கோஷத்துடன், பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்க வேண்டுமென முடிவு செய்யும் போது, கருட மண்டபத்தில் தினம் பாகவதம் படிக்கும் பண்டிதரைப் பற்றியும் பேச்சு வந்தது. அரைகுறையாக பாகவதம் படிக்கும் இவரை வெளியூர் பண்டிதர் பார்த்தால், இவர் படிப்பதைக் கேட்டால் உள்ளூர் பண்டிதர்கள் அனைவருக்கும் அவமானம். இதைத் தவிர்க்க என்ன செய்வது என்று கேள்வி பிறந்தது.

மூத்த பண்டிதர்கள் பலரும், அவர் ஒரு ஓரமாய் வயதான காலத்தில் ஏதோ ஆர்வத்துடன் படிக்கிறார்; அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல, சில இளவட்டங்கள் பிரச்சனையை வேறு விதமாக தீர்ப்பதாக சொன்னார்கள்.

“பெரியவரே! அரங்கனை தரிசிக்க வெளியூர் பண்டிதர் ஒருவர் வரப்போகிறார். மேளதாளம் என கூட்டம் அதிகம் கூடும். தாங்கள் பாகவதம் பக்தி சிரத்தையுடன் படிப்பதற்கு இங்கு இடைஞ்சலாய் இருக்கும். ஆகையால் ஒரு நாள் மட்டும், கிழக்கு கோபுரவாசல் பக்கம் மணல் வெளியில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து, எவ்வித தொந்தரவும் இல்லாமல் படிக்க வேண்டும்”, என பவ்யமாய் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரைப் பைத்தியம் முரண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற பயமும் கூடவே இருந்தது.

ஆனால், அவரோ “ரொம்ப சங்தோஷம். முன்கூட்டியே சொன்னதற்கு மிக்க நன்றி. எல்லம் கண்ணன் கிருபை”, எனக் கூறி மறு நாள் தான் நேராக கிழக்கு கோபுரவாயில் வழியாய் வந்து, அங்கு மண்டபத்தில் பாகவதம் படிப்பதாக உறுதி கூறி விடை பெற்றார்.

இளைஞர்களுக்கு சந்தேகம். ஞாபக மறதி காரணமாய் பெரியவர் கருட மண்டபம் வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்து அன்று காலை தெற்கு கோபுர வாயிலில் இருவரும், கிழக்கு கோபுர வாயிலில் இருவரும் பெரியவரை எதிபார்த்து நின்றனர்.

பெரியவரும் சொன்னபடி கிழக்கு கோபுர வாசல் வழிவந்தார். அவரை உபசரித்து, மணல்வெளி மண்டபத்தில் அமர்த்த வந்த இளைஞர்களிடம், ‘நீங்கள் வெளியூர் பண்டிதரை வரவேற்க செல்லுங்கள். நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன்’, எனக் கூறி மண்டபத்தின் தூண் ஓரமாய் புத்தகத்தை வைத்து விட்டு, முன்னால் உள்ள மணல் வெளியில் பத்து அடி சதுரத்திற்கு சமன் செய்ய ஆரம்பித்தார். மேலாக தென்பட்ட சிறு கற்கள், தூசு தும்புகளை அகற்றி கைகளால் நன்றாக தட்டி மணலை அவர் சீர் செய்வதைப் பார்த்த அந்த இளைஞர்களுக்கு சிரிப்பு வந்தது. ஏதோ வரப்போகும் பண்டிதர் நேராக இங்கே வந்து, இவர் முன்னால் உட்கார்ந்து பாகவதம் கேட்கப் போவது போல, தன் முன்னால் மணலை சீர்செய்து விட்டு, அவர் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், இனி இவர் எழுந்து வர மாட்டார் என சொல்லிக் கொண்டு வேகமாய் தெற்கு வாசலுக்கு, வெளியூர் பண்டிதரை வரவேற்கும் கூட்டத்தில் சேர விரைந்தனர்.

வெகு விமரிசையாக வரவேற்கப்பட்ட அந்த வெளியூர் பண்டிதர் கருட மண்டபம் வந்ததும், சற்று நேரம் காது கொடுத்து உற்று கேட்டு விட்டு, எல்லோரையும் சற்று அமைதியாக இருக்கும்படி சொல்லி தொடர்ந்தார்.

“பண்டிதர்களே! இங்கு எங்கோ மிக மன அமைதியுடன் ஆத்ம சுகத்துடன் பாகவதம் படிப்பது என் காதில் விழுகிறது. அந்த யோகியை, பரம பாகவதரை, முதலில் தரிசித்து வணங்கி, பிறகு அரங்கனை சேவிக்கலாம். அந்த மகானை தாங்கள் எனக்கு காட்ட வேண்டும்”, என கை கூப்பி தொழுதார்.

பண்டிதர்கள் பலருக்கும் ஆச்சர்யம்! கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி மணல் வெளியில் இருந்து கொண்டு பாகவதம் படிக்கும் அவர் குரல் இங்கு இவருக்கு எப்படி கேட்கிறது? ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிழக்கு கோபுர வாயிலில் இருந்து வந்த அந்த இளைஞர்களுக்கு மிக ஆச்சர்யம். ஆகா! அந்த பண்டிதர் பெரிய மகான் போலும்!இவர் அங்கு வந்து பாகவதம் கேட்பார் என நினத்துதானோ என்னவோ, தன் முன் மணலை சரி செய்து வைத்து விட்டு பாகவதம் படிக்கிறார் போலும் என நினைத்து உள்ளூர் பெரிய பண்டிதர்கள் வார்த்தையை எதிர்பார்த்து நின்றனர்.

உள்ளூர் பண்டிதர்களில் ஒருவர் தொடர்ந்தார். “ஸ்வாமி! இங்கு கருட மண்டபத்தில் உள்ளூர் பெரியவர், வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவர், தினம் இங்கு வந்து பாகவதம் படிப்பார். இன்று தாங்கள் வரும் போது கூட்டம் அதிகமாய் இருக்கும், அவருக்கு தொந்தரவு கூடாது என நினைத்து, இன்று மட்டும் அவரை கிழக்கு வாயிலில், அமைதியான சூழ்நிலையில் பாகவதம் படிக்கும்படி நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம். அவரும் சந்தோஷமாய் எல்லாம்
#கண்ணன்_கிருபை என சொல்லிப் போனார். அவர்தான் கிழக்கு வாயிலில் பாகவதம் படிக்கிறார் போலும்”.

இந்த வார்த்தைகளை கேட்டதும் வெளியூர் பண்டிதர், “ஆகா! நாம் எல்லோரும் அபச்சாரப்பட்டு விட்டோமே! இதற்கு நான் காரணமாகிவிட்டேனே! முதலில் அவரிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு பிறகு தான் அரங்கனை சேவிக்க வேண்டும். பாகவத அபச்சாரம் கொடியது அல்லவா? அவரை சற்றே தள்ளியிரும் எனச் சொன்னது பாவம் அன்றோ? வாருங்கள், அவர் இருப்பிடம் போகலாம்” என விரைய, பலரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

உள் மணல் வெளியை தாண்டி, வெளி மணல் வெளியை அடந்த போது, எல்லோரையும் அங்கேயே சற்று நிற்கும்படி கையசைப்பின் மூலம் சொல்லி விட்டு, கூப்பிய கரங்களுடன் பாகவதம் படிக்கும் பண்டிதரின் வலது புறம் வந்து நின்றார். தனக்கு முன்னால் திரண்ட கூட்டத்தையோ, அல்லது வெளியூரிலிருந்து வந்திருந்த பண்டிதரையோ, பாகவதம் படித்துக் கொண்டிருந்த நம் உள்ளூர்
பெரியவர் கவனிக்கவில்லை. அவர் தமது வழக்கப்படி சில வரிகள் படிப்பதும், மெய்மறந்து தன் முன்னால் உள்ள மணல் பரப்பை மகிழ்வுடன் பார்ப்பதும், மாறி மாறி படிப்பதும், மெளனமாய் இருப்பதுமாக ஒருவாறு பாகவத புத்தகத்தை மூடி வைத்தார்.

அதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த வெளியூர் பண்டிதர் சற்று முன்பாக வந்து, பெரியவர் சமன் செய்து வைத்திருந்த மணல் திட்டை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, மிகவும் பய பக்தியுடன் அந்த மணல் திட்டிலிருந்து, சர்வ ஜாக்கிரதையுடன் சிறிது சிறிதாக மணல் துளிகளை தன் மேல் உத்திரியத்தில் திரட்டி, பாகவத பண்டிதரிடம் இரு கைகளாலும், மிக பணிவுடன் கொடுத்தார்.

அவரும் எழுந்து நின்று ‘தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே’ என மன நெகிழ்வுடன் கூறி ‘தாங்கள் ஸ்வீகரித்தபின் அல்லவோ, நான் பெற வேண்டும்’, என்று கை கூப்பி நின்றார். வெளியூர் பண்டிதரோ, ‘தங்களால் கிடைக்கப் பெற்றது. தங்களுக்கு முதலில் சமர்ப்பித்த பிறகு அல்லவோ மற்றவர்களுக்கு’ எனக் கூறி மறுபடியும் மணல் துகள்களை உத்தரியத்துடன் காட்ட, உடனே பாகவதம் படித்த பண்டிதர் மிகவும் அடக்கத்துடன் சிறிது மணல் துளிகளை எடுத்து நெற்றியில் திலகமாய் இட்டுக் கொண்டு, சிரசிலும் தரித்துக் கொண்டு, சந்தனம் பூசிக்கொள்வது போல மார்பிலும் பூசிக் கொண்டார்.

இதைப் பார்த்த மக்களுக்கு ஏதும் புரியவில்லை. அதே சமயம் அவர்கள் மனத்தில் ஒரு தெளிவு. ‘இது நாள் வரையில் அரைப் பைத்தியம் எனக் கருதப்பட்ட பெரியவர், சாதாரண பண்டிதர் இல்லை; #கண்ணனின்_கிருபை, அரங்கனின் அருள் பூரணமாய்ப் பெற்றவர். நாம் தவறு செய்துவிட்டோம்’ என்ற எண்ணத்துடன் அவர்கள் மெளனமானார்கள். கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கோண்டு இருக்கும் போது வெளியூர் பண்டிதரி தொடர்ந்தார்.

“ஸ்வாமி! தாங்கள் ஏன் பாகவத்தை தொடர்ச்சி விடாமல் படிப்பது இல்லை? சில பல இடங்களை விட்டுவிட்டு படிப்பதன் விபரம்தான் என்ன?”

பாகவதம் படித்த உள்ளூர் பண்டிதர் மிக அடக்கமாய் சிரித்துக் கொண்டே, “ஸ்வாமி! தாங்கள் எல்லாம் தெரிந்தும் தெரியாது போல் ஏன் கேட்கிறீர்கள்? பல நூறு மனிதர்கள் மன சந்தோஷத்துடன் உணவு உண்ணும் போது, அங்கே ஒரு பசித்தவன், அந்த விருந்தை பார்த்தாலும் அவன் பசி போகாதல்லவா? பசித்தவன் புசித்தால் அல்லவோ பசி போகும், வயிறு நிறையும், மனம் குளிரும்? அதே போல் பகவானை அனுபவிக்கும் போது, சுற்றிலும் பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அந்த ருசி தெரியாதல்லவா? தாங்கள் ருசி தெரிந்து, கண்ணன் பாத துளியை சேகரித்து எனக்கு கொடுத்தீர்கள். கண்ணனை கண்டேனே தவிர, அவன் பாத துளியை தரிசிக்க மறந்தேன். தங்களால் அந்த பாக்கியம் கிடைத்தது. தங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை. இன்று தங்கள் வருகையால் அல்லவோ எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. நான் ஏதும் சொல்லுவதற்கு பதில், தாங்களே ஏதும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம். நானும் அதை உவப்புடன் கேட்பேன்.”

உடனே வெளியூர் பண்டிதர் கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“திருவரங்கவாசிகளே! நீங்கள் எல்லோரும் அரங்கனை தினம் தினம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். பரம பக்தரான இந்த பண்டிதர் பாகவதம் படிக்கும் போது, என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. ஆனால் பேரருளாளன் கண்ணன் அறிவான். அவனை இவருக்கு தெரியும். இன்று காலை நான் வந்தவுடன் மேளதாள ஆரவாரத்திற்கும், வேத கோஷத்திற்கும் நடுவில் பாகவதம் படிப்பது என் காதருகில் மிக தெளிவாகக் கேட்டது. படிப்பது நின்றபோது சதங்கை ஒலி மட்டும் கேட்டது. ஆக பரமபாகவதாரன பெரியவர் முன் கண்ணன் களி நடனம் ஆடுகிறான். அதை அவர் அனுபவிக்கும்போது படிப்பதை நிறுத்தி விடுகிறார். கண்ணன் லீலை தொடற்கிறது. கண்முன் நின்ற கண்ணன் மறைந்ததும், பாகவதம் அங்கு தொடர்கிறது. மறுபடி கண்ணன் இவர் படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆட, கண்ணனை இவர் பார்ப்பதும், விட்டு விட்டு பாகவதம் படிப்பதும் தொடர்கிறது.

ஆக பாகவதம் எந்த குறையும் இல்லாமல் தொடர்கிறது. கருட மண்டபத்தில் இவர் தன் மேல் துண்டினால் தினமும் தன் முன்பாக சுத்தம் செய்துவிட்டு பிறகு பாகவதம் படிப்பது நம்மில் யாரும் அவர் முன்வந்து அமர்ந்து பாகவதம் கேட்போம் என்ற எண்ணத்தில் அல்ல. பாகவதம் படிக்க ஆரம்பித்ததும், கண்ணன் அவர் முன் தோன்றி, படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆடுகிறான். அவன் கால்படும் இடம் சுத்தமாக இருப்பதற்காகத்தான் தனது வஸ்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறார். அதேபோல் இங்கு மணல் வெளியில் இவர் கையால் செய்த மணல்மேட்டில் கண்ணன் பாத சுவடுகள் படிந்திருப்பதைப் பாருங்கள். கண்ணன் இவர் முன் நடனம் ஆடியதற்கு அதுவே சாட்சி. அவர் தினமும் காணும் காட்சியைத்தான் நான் கண்டேன். இவர் தயவால் கண்ணன் களிநடனம் கண்டேன். அவன் பாதம்பட்ட இடத்திலிருந்து பாத துளி சேகரித்தேன். அதுதான் இந்த திருமண். திருவரங்கத்தில் பரம பாகவதர் இவர் வழிகாட்ட அரங்கனை சேவிக்க அனைவரும் செல்வோம்.”

அரைகுறை பைத்தியம் என அதுவரை ஊரால் கருதி வந்த அந்த உள்ளூர் பரம பக்தர் முன் செல்ல, அரங்கனை தரிசிக்க பின் தொடர்ந்தார் வெளியூர் பண்டிதர்!