சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சிவனை நினைத்தாலே பல்வேறு பலன்களைத் தரக்கூடியவர். சிவ நாமமும், சிவ பூஜையும் நம்மை நல்வழிப்படுத்துவதோடு, முக்தியை தர வல்லவர்.

1. ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம்.

2. புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட முக்தியைப் பெறலாம்.

3. பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் சேரும்.

4. சந்தன லிங்கம் செய்து வழிபட அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.

5. திருநீறு லிங்கம் (விபூதி லிங்கம்) வைத்து வழிபட எல்லா வித செல்வங்களும் குவியும்.

6. மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ் நாள் கிடைக்கும்.

7. அரிசி மாவால் சிவ லிங்கம் செய்து வழிபட உடல் வலிமை பெறும்.

8. சோறு லிங்கம் (அன்னம் லிங்கம்) செய்து வழிபட உணவுப் பற்றாக்குறை நீங்கும்.

9. பழங்களால் லிங்கம் செய்து வழிபட சிறப்பான இன்பமான வாழ்வு அமையும்.

10. தயிர் லிங்கம் நற்குணத்தைத் தருவார்.

11. தண்ணீர் லிங்கம் – அனைத்தையும் மேன்மையாக்குவார்.

12. கூர்ச்சம் எனப்படும் முடிச்சிட்ட நாணல் லிங்கத்தை வழிபட முக்தி கிடைக்கும்.

13. சர்க்கரை, வெல்லம் லிங்கம் செய்து வழிபட விரும்பிய வாழ்க்கையும், இன்பமும் கிடைக்கும்.

14. பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

15. பசு வெண்ணெய்யை லிங்கம் செய்து வழிபட மன மகிழ்ச்சி ஏற்படும்.

16. ருத்திராட்ச லிங்கத்தை வைத்து வழிபட நல்லறிவு கிடைக்கும்.

இப்படி பல்வேறு சிவ லிங்கத்தை வழிபட்டு அனைத்து வித நல்வினைகளைப் பெற்றிடுங்கள்.

ஓம் சிவாய நம

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்? சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.

சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது. அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.

சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் ‘அசல லிங்கம்’ என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை ‘பரார்த்த லிங்கம்’ என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும்.

அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் ‘சலன லிங்கம்’ என்பதாகும்.

மூன்றாவது வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் ‘அசலசல லிங்கம்’ ஆகும்.

நான்காவது வகை ‘சலாசல லிங்கம்’ எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.

சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே பூஜைகளை செய்யத் துவங்க வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு…

ராம பாதுகை

பரதன் அன்றாடம் துயில் எழுந்து நேராக தர்பாருக்குச் செல்வான். அங்கே சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைக்கு வணக்கம் செலுத்துவான். ‘தங்கள் ஆட்சியில் என்றும், எல்லோருக்கும் நன்மையே விளைய வேண்டும் அண்ணா’ என வேண்டிக் கொள்வான்.

ஒரு நாள் பிறக்கிறது என்றால், அவனைப் பொறுத்தவரை சந்தோஷம் தான். ஆமாம், அந்த ஒருநாள் தன் அண்ணன் ராமன் அயோத்திக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது அல்லவா?

பரதனின் மனநிலை, அவன் தம்பி சத்ருக்னன், வசிஷ்டர் முதலான ரிஷிகள், ஏன், அயோத்தி மக்களிடமும் நிலவியது.

இத்தனைக்கும் ராமன் நகர்வலம் வந்து மக்களைச் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. தசரதரின் ஆட்சியில் மக்கள் நலமாக வாழ்ந்ததால் ராமனின் தலையீடும் இல்லை. இருந்தாலும் ஆட்சி நிகழ்வுகளின் நீக்கு போக்கை கவனித்து வந்தான்.

எனினும் அயோத்தி மக்கள் மற்றும் அரண்மனைவாசிகளுக்கு ‘ராமன்’ என்ற சொல்லே புத்துணர்வை தந்தது. அயோத்தியில் தங்களோடு ராமன் இருக்கிறான் என்பதே மகிழ்ச்சி அளித்தது. சில சமயம் உப்பரிகையில் அவன் வந்து நிற்கும் போது அந்த வழியாகச் செல்பவர்கள் வணக்கம் செலுத்த, ராமனும் பதிலுக்கு வணக்கம் செலுத்துவான். அதை மக்கள் பாக்கியமாகக் கருதினர். அந்தளவுக்கு ராமன் என்னும் காந்தம் அவர்களை ஈர்த்தது. ஆனால், அவன் காட்டுக்குச் சென்ற பின்னர் அவர்களின் முகத்தில் கவலை படர்ந்தது.

குடிமக்களுக்கே அந்நிலை என்றால், 

பரதன் பற்றிச் சொல்ல வேண்டுமா? ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று சொல்லி ராமன் புறக்கணித்த வருத்தம் அவன் மனதை விட்டு அகலவே இல்லை. வசிஷ்டர், அவனது மாமனார் ஜனகர் கேட்டும் கூட அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. எப்படியாவது ராமனை அயோத்திக்கு அழைத்து வருவது கங்கணம் கட்டிக் கொண்டு சென்ற பரதன் ஏமாற்றம் அடைந்தான். ராமன் அயோத்தி திரும்ப மறுத்த நிலையில் பாதுகையாவது தருமாறு பரதன் கேட்டான்.

தம்பியின் இந்த விருப்பத்தையாவது நிறைவேற்ற சம்மதித்தான் ராமன். காட்டில் பாதுகை இல்லாமல் கரடு முரடான வழியில் நடக்க நேரும் என்பதையும், இன்னும் 14 ஆண்டுகள் இப்படியே காலம் தள்ள வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டே தன் பாதுகைகளைத் தியாகம் செய்தான். பரதன் சமாதானம் அடைந்தால் போதும் என்பது ராமனின் எண்ணம்.

அந்தப் பாதுகைகளை தலைமீது சுமந்து வந்த பரதன், அவற்றை சிம்மாசனத்தில் அமர்த்தி, மலரிட்டு, அர்ச்சித்து, வழிபட்டு தன்னையும், அயோத்தி நாட்டையும் நல்வழிப்படுத்துமாறு வேண்டினான்.

என்ன தான் பாதுகைகள் என்றாலும் ராமனுக்குச் சமமாகுமா? ஆனாலும் ராமனின் ஆசி இருந்ததால் அயோத்தியில் எந்தக் குழப்பமும் இல்லை. மக்களுக்கு குறை ஏதும் இல்லை. ஆனால் ராமனின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தான் பரதன்.

ஒருநாள் குடிமக்கள் இருவருக்கு இடையில் வழக்கு ஒன்று எழுந்ததாக கேள்விப்பட்ட பரதன் வருந்தினான். ராம பாதுகைகளின் நல்லாட்சியில் எங்கு தவறு நடந்தோ தெரியவில்லையே… என துடித்தான். இப்படி ஒரு நெருக்கடி உருவாகக் காரணம் என்ன? என சிந்தித்தபடி சபைக்கு வந்தான் பரதன். பின் தொடர்ந்தான் சத்ருக்னன்.

அவையில் இரு விவசாயிகள் கைகட்டி நின்றிருந்தனர்.

சிம்மாசனத்தை அலங்கரித்த பாதுகைகளை வணங்கிய பரதன், ” உங்களுக்குள் என்ன பிரச்னை?” எனக் கேட்டான்.

அவர்களில் ஒருவன், ”ஐயனே! எனக்குச் சொந்தமாக விளைநிலம் இருந்தது. அதை இவருக்கு விற்றேன்”

”அதற்கு பணம் தர மறுக்கிறாரா?” எனக் குறுக்கிட்டான் பரதன்.

”இல்லை ஐயனே! பேசியபடி பணம் வாங்கி விட்டேன். பிரச்னை அதுவல்ல”

”வேறு என்ன?” கேட்டான் பரதன்.

நிலத்தை வாங்கியவன். ”ஐயனே! வாங்கிய நிலத்தை நான் கலப்பையால் உழுதேன். அப்போது அங்கு தங்கப் புதையல் கிடைக்கப் பெற்றேன்.”

பரதனுக்கு வழக்கின் தன்மை புரிவது போலிருந்தது.

”உடனே இந்தப் புதையல் உங்களுக்கு தான் சொந்தம். இது உங்கள் நிலத்தடியில் இருந்தது என இவரிடம் ஒப்படைத்தேன்.”

”நிலத்தை விற்றேன் என்றால் அடியில் உள்ள புதையலையும் சேர்த்து விற்றதாகத் தானே அர்த்தம்?” என்றார் விற்றவர்.

”இல்லை! நிலத்தை மட்டும் தான் எனக்கு விற்றீர்கள். அதனடியில் இருக்கும் புதையல் குறித்து தெரிந்திருக்க தங்களுக்கு நியாயமில்லை. ஆகவே புதையல் உங்களுக்கே சொந்தம்” என்றார் நிலத்தை வாங்கியவர்.

பெருமிதத்துடன் அவர்களை பார்த்த பரதன், ”எத்தனை நேர்மையாளர்கள் இவர்கள்! மக்கள் இப்படி தர்ம வழியில் வாழ சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைகள் தானே காரணம்! ஒரு வேளை நான் ஆட்சி நடத்தினால் இப்படி நேர்மையுடன் இருப்பார்களா? புதையல் தனக்கே சொந்தம் என சண்டையிட்டிருப்பர்!

ராமனின் நேர்மை, பெருந்தன்மை, பரந்த குணம் தான் மக்களிடம் வேரூன்றி விட்டது! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பதே உண்மை!

போதும் என வாழ்ந்திடும் அவர்களின் பொன்மனம் பரதனுக்கு புரிந்தது. அயோத்தி மக்களுக்கு பயன்படும் விதத்தில் பணத்தை செலவழிக்க முடிவெடுத்தான். அதை சபையோர் அனைவரும் ஏற்றனர்.

ராமன் ஆண்டால் என்ன… ராம பாதுகை ஆண்டால் என்ன! ராம உணர்வு இருக்கும் வரை தர்மம் காக்கப்படும் என்பது அங்கே என்பது நிரூபணமானது